லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ.. ஒரு மணி நேரத்திற்கு லட்சத்தில் செலவு செய்யும் கோடீஸ்வரர்கள்..!
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளை பாதுகாக்க லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஒரு மணி நேரத்திற்கு $2000 செலவு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பகுதியில் திரைப்பட நிறுவனங்கள் மற்றும் திரைப்பட நகரங்கள் அமைந்துள்ளன. ஜனவரி 7ஆம் தேதி இந்த பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவிய நிலையில், 7 நாட்களாக தொடர்ந்து எரிந்து வருகிறது. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், சில கோடீஸ்வரர்கள் தங்கள் வீட்டை பாதுகாக்க ஒரு மணி நேரத்திற்கு 2000 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ₹1.7 லட்சம் செலவு செய்து, தனியார் தீயணைப்பு நிறுவனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த தீயணைப்பு பணிகளில் மழைத்துளி விழுவது போல செயற்கையான ஸ்பிரிங்லர் அமைத்து தண்ணீரை செலுத்தி தங்கள் வீடுகளை பாதுகாத்து வருவதாகவும், தீ தடுப்பு மருந்துகளை வீடுகள் மீது தெளிப்பது மற்றும் மரங்களை தீப்பிடிக்காத வகையில் பாதுகாக்கும் ஜெல்களை பயன்படுத்துவது போன்ற சேவைகளையும் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இந்த காட்டுத் தீயால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 150 பில்லியன் வரை சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Mahendran