ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (13:58 IST)

கொரோனா வைரஸ் உருவானது இப்படிதான்..! – உண்மையை உடைத்த அமெரிக்க விஞ்ஞானிகள்!

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவானது குறித்து பல்வேறு வதந்திகள் உலா வந்த நிலையில், அது எங்கிருந்து வந்தது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து திடீரென பரவிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் பரவி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பலி கொண்டது. தொடர்ந்து உலக நாடுகளுக்கும் பரவி வரும் இந்த கொரோனாவால் இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் பலியாகி உள்ளனர்.

இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதேசமயம் இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது தொடர் மர்மமாகவே இருந்து வருகிறது.

சீனாவின் வூகானில் இருந்து இது பரவியதால் அங்குள்ள வைரஸ் ஆராய்ச்சியகத்தில் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும், சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுத திட்டத்துடன் இது தொடர்புடையதாய் இருக்கலாம் என இஸ்ரேல் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர். இஸ்ரேலின் இந்த கருத்தால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் சீன அதிகாரி ஒருவர் அமெரிக்கா மேல் பழியை தூக்கி போட்டார்.

சீன வெளியுறவு செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் “அமெரிக்க ராணுவம்தான் சீனாவில் இந்த கொரோனாவை பரப்பியிருக்க கூடும்” என குற்றம் சாட்டினார். இந்த தொடர் குற்றச்சாட்டுகளும், கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற செய்தியும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வந்தது.

ஆனால் சமீபத்தில் கொரோனா உருவாக்கம் குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸின் மூலமான சார்ஸ் மற்றும் சிஓவி-2 மூலக்கூறு அமைப்புகளிலிருந்து உருவாகியுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் மரபணு தகவல்களை ஒப்பிடுவதன் மூலம் சார்ஸ் மற்றும் சிஓவி-2 வைரஸ்களும் இயற்கையாக உருவாகியிருப்பதை உணர முடிவதாக நுண்ணியிரியல் பேராசிரியர் கிரிஸ்டியன் ஆன்டர்சன் தெரிவித்துள்ளார்.