ரஷ்யாவோடு இந்தியா ராணுவ பயிற்சி..! – முகம் சுளிக்கும் அமெரிக்கா!
ரஷ்யா தலைமையில் நடைபெறும் கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா பங்கேற்பது குறித்து அமெரிக்கா மறைமுகமாக அதிருப்தி தெரிவித்துள்ளது.
ரஷ்யா தலைமையில் “வொஸ்டாக் 2022” என்ற கூட்டு ராணுவ பயிற்சி நாளை தொடங்கி நடைபெறுகிறது. இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா, சீனா, தஜிகிஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்கின்றன.
தரைப்படை, விமானப்படை மற்றும் கப்பற்படை என முப்படைகளிலும் மேற்கொள்ளப்படும் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா கப்பற்படை பயிற்சி தவிர மற்ற இரண்டு பயிற்சிகளிலும் பங்கு பெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் நட்பு நாடாக உள்ள இந்தியா, ரஷ்யாவுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது அமெரிக்காவை அதிருப்திப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
ரஷ்யாவின் கூட்டு ராணுவ பயிற்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் “உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுடன் எந்த நாடும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுவது கவலையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.