என்ன அவமானம் செஞ்சிட்டீங்க! – கையெழுத்து போட்டு கடுப்பாக்கிய ட்ரம்ப்!
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக கையெழுத்து போட்டு சீனாவை சீண்டி விட்டுள்ளார் அதிபர் ட்ரம்ப்.
ஹாங்காங் கைதிகளை சீனாவுக்கு கொண்டு செல்லும் புதிய மசோதாவுக்கு எதிராக கடந்த ஆறு மாத காலமாக ஹாங்காங் மக்கள் வரலாறு காணாத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு மோதல்களும், கலவரங்களும், உயிர் பலிகளும் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘ஹாங்காங் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 2019’ நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி ஹாங்காங்கில் மனித உரிமைகளை மீறினால் பொருளாதார தடை விதிக்கவும், ஹாங்காங் அரசுக்கு அமெரிக்க நிறுவனங்கள் வழங்கி வரும் ஆயுத உற்பத்தியை நிறுத்தவும் கூட வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சட்ட திருத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டு அதை உறுதி செய்துள்ளார்.
இதனால் பொருளாதார தடை விதிக்கப்படுமோ என ஹாங்காங் அரசு புளியை கரைத்துக் கொண்டிருக்க, சீனாவோ அமெரிக்காவிடம் மல்லுக்கு நிற்கிறது. எங்கள் பேச்சை கேட்காமல் இதில் கையெழுத்திட்டதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என சீனா சூளுரைத்துள்ளது.
அமெரிக்கா – சீனா இடையே ஏற்கனவே இருக்கும் வர்த்தக போரில் தற்போது இந்த ஹாங்காங் போராட்டமும் சேர்ந்து கொண்டுள்ளது.