வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (08:43 IST)

பயிற்சிக்காக பறந்த விமானம்; செயலிழந்த என்ஜின்! – நொடி பொழுதில் நடந்த அசம்பாவிதம்!

உக்ரைனில் விமான பயிற்சிக்காக பறந்த ராணுவ விமானம் வெடித்ததில் 25 பேர் உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான ராணுவ விமானப்படை தளம் உள்ளது. இங்கு விமானப்படை வீரர்களுக்கு விமானத்தை இயக்குவது தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் அண்டனோவ் யூ என் 26 ரக விமானத்தை இயக்க பயிற்சி அளிப்பதற்காக அந்த விமானத்தில் 20 பயிற்சி வீரர்களும், விமானிகள் உள்ளிட்ட 7 பேருமாக மொத்தம் 27 பேர் விமானத்தில் பயணித்துள்ளனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் ஒரு பக்க என்ஜின் செயலிழந்துள்ளது. உடனடியாக கீழே இருந்த நெடுஞ்சாலை ஒன்றில் விமானத்தை தரையிறக்க விமானி முடிவு செய்துள்ளார்.

ஆனால் அதற்குள் விமானம் கட்டுப்பாட்டை இழக்கவே அந்த பகுதியில் இருந்த புதர் ஒன்றில் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் விமானிகள் உட்பட 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். விமானம் மோதுவதற்கு சில வினாடிகள் முன்பாக விமானத்திலிருந்து குதித்த இரு பயிற்சி வீரர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.