திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (09:45 IST)

துருக்கியில் நிறைவடைந்த மீட்பு பணிகள்! 40 ஆயிரத்திற்கும் அதிகமான பலி!

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியா எல்லைக்குட்பட்ட நகரங்களில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி கடும் நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டது. இதனால் பல அடுக்குமாடி கட்டிடங்கள், குடியிருப்புகள் மொத்தமாக சரிந்து தரை மட்டமாகின. உலகை உலுக்கிய இந்த இயற்கை பேரிடரிலிருந்து துருக்கியை காக்க பல்வேறு நாடுகளும் தங்கள் மீட்பு படைகளை அனுப்பி வைத்தன.

நாளுக்கு நாள் தோண்ட தோண்ட பிணங்களாக கிடைத்து வந்த நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. சில இடங்களில் நம்பிக்கை அளிக்கும் விதமாக நிலநடுக்கத்திற்கு பிறகு பல நாட்கள் கழித்தும் உயிருடன் இருந்த பலர் மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 14 நாட்களாக நடந்து வரும் இந்த மீட்பு பணிகள் கிட்டத்தட்ட நிறைவை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை துருக்கியில் நிலநடுக்கத்திற்கு 40,642 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் பலி எண்ணிக்கை 5,800 ஐ கடந்துள்ளது.

Edit by Prasanth.K