கருப்பின மக்கள் மிகவும் மோசமானவர்கள்.. அமெரிக்க அதிபர் சர்ச்சை பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்காவின் பால்டிமோர் நகர மக்களை குறித்து பேசிய கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து பழங்குடியினர் மற்றும் அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் குறித்து பல சர்ச்சை கருத்துகளை பேசிவருகிறார். இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் பால்டிமோர் நகர மக்களை குறித்து நிறவெறியை தூண்டுவது போல், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
அந்த டிவிட்டர் பக்கத்தில், ” பால்டிமோர் நகரம், எலிகளால் கொறிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சிதறிக் கிடக்கும் அருவருப்பான நகரம், மனிதர்கள் யாரும் அங்கு வசிப்பதற்கு விரும்ப மாட்டார்கள், அது மோசமான நகரம்” என்று கூறியுள்ளார். மேலும் மெக்சிகோ எல்லையில் இருக்கும் அகதிகளை காட்டிலும் பால்டிமோர் மக்கள் மோசமானவர்கள்” என்றும் கடுமையான சொற்களை பயன்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பால்டிமோ நகரத்தில் வசிப்பவர்கள் 52 சதவீதம் பேர் கருப்பினத்தவர்கள். மேலும் டிரம்ப் அந்த மக்களை மட்டுமல்லாது, அந்நகரைச் சேர்ந்த கருப்பினத்தலைவரும், ஜனநாயகக் கட்சியின் எம்.பி.யுமான எலிஜா கம்மிங்கஸ் என்பவரையும் குறிவைத்தே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் 4 பேரை , தங்களுடைய பூர்வீக நாட்டிற்கு திரும்ப செல்லுமாறு கூறி பெரும் சர்ச்சையை கிளப்பிய டிரம்ப், தற்போது நிறவெறியை தூண்டும் வகையில் பேசியது அமெரிக்க கருப்பின மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.