கேஷுவல் விசிட்டா? கேஷ் குறைப்பு விசிட்டா? – ட்ரம்ப்பின் இந்திய பயணம்!
இந்தியாவிற்கு வருகை தர இருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் வரிவிதிப்பு குறித்து விமர்சித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபட் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக 24ம் தேதி இந்தியா வர இருக்கிறார். இதற்காக 7 அடிக்கு சுவர் கட்டுவது முதல் புதிய சாலைகள் அமைப்பது வரை குஜராத் முழுவதும் பிஸியாக வேலை நடந்து வருகிறது.
அமெரிக்காவில் ஒரு கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும், உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் பேசியுள்ளார். இந்தியாவிற்கு வருகை தர உள்ள நிலையில் இந்தியா குறித்து இப்படி விமர்சித்துள்ளாரே என சிலருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தியா குறித்து ட்ரம்ப் இப்படி பேசுவது புதிதல்ல. வளர்ந்து வரும் நாடுகள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு உலக அளவில் வர்த்தகரீதியாக சில சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த சலுகைகள் வல்லரசு நாடுகளுக்கு கிடைப்பதில்லை என்பதில் உள்ள ஆதங்கத்தை அடிக்கடி ட்ரம்ப் வெளிக்காட்டி வருகிறார். அதன் பிரதிபலிப்புதான் சீனாவுடனான வர்த்தக போர் என கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா வரும் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் எந்தெந்த விஷயங்கள் குறித்து பேசுவார் என்பதில் ஊகங்கள் மட்டுமே இருக்கின்றன. ஆனால் ட்ரம்ப் சும்மா வெறுமனே சுற்றிப்பார்க்க மட்டும் இந்தியா வர வேண்டிய அவசியமில்லை ஏதேனும் லாப நோக்கோடு அல்லது ஒப்பந்த திட்டத்தோடுதான் வருவார் என கூறப்படுகிறது. அமெரிக்க பொருட்களின் வரிக்குறைப்பு குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.