உங்க ஆசைக்கு நாங்க பெத்துக்க முடியுமா? மக்கள் முடிவால் சிக்கலில் சீனா!
சீனாவில் ஆண்டுக்கு ஆண்டு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் சீனா எதிர்காலத்தில் பெரும் இடர்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
உலக மக்கள் தொகையில் அதிகமான மக்கள் தொகை உள்ள நாடுகளில் முதல் இடத்தில் சீனாவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது. சீனாவின் மொத்த மக்கள் தொகை 1.4 பில்லியனாக உள்ளது. கடந்த சில வருடங்கள் முன்னதாக மக்கள் தொகையை குறைப்பதற்காக சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஒரு தம்பதியர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும். இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறை தண்டனை என்றெல்லாம் எச்சரிக்கப்பட்டது.
ஆனால் அதன் விளைவாக சீனாவில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துவிட்டது. நீண்ட கால நோக்கில் கணக்கிட்டால் எதிர்காலத்தில் சீனாவில் இளைஞர்களை விட முதியவர்கள்தான் அதிகம் இருப்பார்கள் என்ற நிலை உண்டானது. இதனால் இந்த கட்டுப்பாடுகளை தளர்த்திய சீன அரசு ஒவ்வொரு தம்பதியரும் மூன்று குழந்தை வரை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தது. அவ்வாறு குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஊக்க தொகை, அரசு உதவிகள் என பலவும் அறிவிக்கப்பட்டன. ஆனாலும் மக்கள் பலர் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நாளுக்கு நாள் சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்தே வருகிறது.
கடந்த ஆண்டு பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. அதை தொடர்ந்து இந்த ஆண்டும் அதே நிலை நீடிக்கிறது. 60 ஆண்டுகளில் இல்லாத அளவு சீன மக்கள் தொகை 2022ல் வெகுவாக குறைந்தது. அதை தொடர்ந்து 2023ம் ஆண்டிலும் மக்கள் தொகை 2 மில்லியன் அளவிற்கு குறைந்துள்ளது.
இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் சீனர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக குறைந்துவிடும் என தீவிர ஆலோசனையில் சீன அரசு உள்ளது.
Edit by Prasanth.K