’இதுல இருந்து வெளிய எடுங்க.. அடிமையா கூட இருக்கோம்” – பூகம்பத்தில் சிக்கி கெஞ்சும் சிறுமி!
துருக்கி – சிரியா எல்லையில் ஏற்பட்ட பூகம்பத்தினால் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சிறுமி கெஞ்சும் வீடியோ பார்ப்போரை கலங்க செய்வதாக உள்ளது.
துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையோர பகுதியில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இதுவரை பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆங்காங்கே தோண்ட தோண்ட பிணங்களாக கிடைக்கும் நிலையில் அப்பகுதி முழுவதுமே அழுகை குரல்கள் நிறைந்துள்ளது.
சிரியாவின் எல்லைப்பகுதியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் சிறுமி ஒருவரும், சிறுமியின் தம்பியும் சிக்கியுள்ளனர். யாராவது தங்களை மீட்பார்கள் என 24 மணி நேரத்திற்கும் மேலாக அதில் சிக்கி கிடந்த இருவரும் கடைசியாக மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் அவர்கள் சிக்கி இருந்ததால் அவற்றை அகற்றும் வரை மீட்பு பணியில் இருந்தவர்கள் சிறுமியிடம் பேச்சு கொடுத்தனர்.
தனது தம்பியின் தலைமேல் இடிபாடுகள் விழாமல் கையால் மூடிக்கொண்டிருந்த அந்த சிறுமி “எங்களை எப்படியாவது இதிலிருந்து வெளியே எடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறோம். வாழ்க்கை முழுக்க அடிமையாக இருக்கிறோம்” என கெஞ்சும் தோனியில் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த சிறுமியின் பெயர் தெரியவில்லை. சிறுமியின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. ஆனால் அனைத்தையும் இழந்து உயிரை மட்டும் வைத்துக் கொண்டு அந்த சிறுமி பேசியது பலரையும் கண் கலங்க செய்துள்ளது.
Edit by Prasanth.K