வேட்டையாட வந்தவர்களை மிதித்து கொன்ற யானைகள்! – தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு!
தென் ஆப்பிரிக்காவில் யானை வேட்டையர்களை யானைகளே தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்க காடுகளில் யானைகள் அதிகளவில் உள்ள நிலையில் அவற்றின் தந்தங்களுக்காக அவற்றை வேட்டையாடும் கூட்டத்தினரும் உள்ளனர். சட்டத்திற்கு புறம்பாக யானைகளை வேட்டையாடும் இந்த வேட்டையர்கள் கும்பலை பிடிக்க தென் ஆப்பிரிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் வேட்டையர்கள் மூவரை கண்டதும் துரத்தி சென்றுள்ளனர். வனத்துறையினரிடமிருந்து தப்பிக்க காட்டுக்குள் புகுந்த வேட்டையர்கள் யானை கூட்டம் ஒன்றின் நடுவே சிக்கி கொண்டுள்ளனர். அவர்களை யானைகள் தாக்கிய நிலையில் ஒருவர் தப்பி செல்ல மீத இரண்டு பேரையும் யானைகள் தூக்கி வீசி பந்தாடியுள்ளன. அவை அங்கிருந்து சென்ற பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவரை மருத்துவமனையில் அனுமதித்த வனத்துறையினர், யானைகள் மிதித்து இறந்த நிலையில் மற்றொரு வேட்டையரையும் கண்டறிந்துள்ளனர். இந்த சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.