நீங்கள் ஒரு பெண் என்பதை நிரூபியுங்கள்! பளுதூக்கும் வீராங்கனையை அவமானப்படுத்திய விமான நிலைய ஊழியர்!
ரஷ்யாவைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனையை ஒரு பெண் என நிரூபியுங்கள் என விமான நிலைய அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் கிராஸ்னோடார் பகுதியை சேர்ந்தவர் ஆனா துரேவா. இவர் ரஷ்யாவுக்காக பல பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பல முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். இப்போது அவர் பளுதூக்கும் வீரர்களுக்கு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் மாஸ்கோவில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற போது விமான நிலைய அதிகாரி ஒருவர் அனைவர் முன்னிலையிலும் ‘நீங்கள் ஒரு பெண் என்பதை நிரூபியுங்கள்’ எனக் கூறி அவரை அவமானப்படுத்தியுள்ளார்.
இது அங்கே சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதித்தனர். ஆனால் தனக்கேற்பட்ட அவமானத்துக்கு அந்த விமான நிலைய நிறுவனம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என ஆனா துரேவா கூறியுள்ளார்.