உயரும் கடல் நீர் மட்டம்.... 2100க்குள் கடலில் மூழ்கும் நாடுகள்...
கடல் நீர் மட்டம் நினைத்ததை விட வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் 2100ம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் வீடுகள் கடலில் மூழ்கிப் போய் விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதில் மேரிலான்ட் மற்றும் விர்ஜீனியாவில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மூழ்கும் நிலை ஏற்படும் என கூறியுள்ளனர். இக்காரணத்தால் பல லட்சம் பேர் இடம் பெயர்ந்து செல்லக் கூடிய நிலை ஏற்படுமாம். மேலும் பல கோடி அளவுக்கு பொருட் சேதமும் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
கரோலினா, புளோரிடா ஆகியவையும் கடும் பாதிப்பைச் சந்திக்கும் நிலை ஏற்படுமாம். இதில் புளோரிடாவுக்குத்தான் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள்.
கடல் நீர் மட்டம் உயரக் காரணம்:
இதற்குக் முக்கியமான காரணம், பூமியில் கரியமில வாயுவின் உமிழ்வு தொடர்ந்து அதிகரித்து வருவதே. இதுகுறித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மைக்கேல் ஜெரார்ட் கூறுகையில், எந்த வேகத்தில் கடல் நீர் மட்டும் உயரும் என்பதை சரியாக கணிக்க முடியாது என்றாலும் அது வேகமாக இருக்கிறது என்பதே உண்மை.
விஞ்ஞானிகளின் கணிப்புப் படி கடல் நீர் மட்டும் 6 அடி அளவுக்கு உயரும் என்று வைத்துக் கொண்டால் அமெரிக்காவில் 2 சதவீத பகுதி கடலில் மூழ்கிப் போய் விடும். பல லட்சம் கோடி அளவுக்கு பெரும் சேதத்தை அமெரிக்கா சந்திக்கும் என கூறியுள்ளார்.