1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (15:03 IST)

விரைவில் மொத்தமாக அழியப்போகிறது பனிக்கரடிகள்! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

சமீப காலமாக உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் பனிக்கரடிகள் மொத்தமாக அழியும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

21ம் நூற்றாண்டில் உலகின் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது பருவநிலை மாற்றம். தொழிற்சாலைகள், நகரமயமாக்கல் போன்ற செயல்பாடுகளால் கடந்த சில ஆண்டுகளில் பருவநிலை மாற்றம் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட சிலர் குரல் கொடுத்து வந்தாலும் இதுகுறித்த பெரும்பான்மையான விழிப்புணர்வு மக்களுக்கு குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் பருவ நிலை மாற்றத்தால் ஆர்டிக் மற்றும் அண்டார்டி பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் வாழும் பனிக்கரடிகள் இனம் அழியும் சூழல் ஏற்பட்டுள்ளது. பனிப்பிரதேசத்தில் வாழும் இந்த பனிக்கரடிகள் கடல்வாழ் உயிரினங்களான நீர்நாய்கள், பெரிய வகை மீன்களை உண்டு வாழ்ந்து வருகின்றன. தற்போதைய பருவநிலை மாற்றத்தால் கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வருவதால் பனிக்கரடிகள் வாழும் இடத்தை இழப்பது, உணவு பற்றாக்குறை போன்ற சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இதனால் 2100ம் ஆண்டிற்குள் பனிக்கரடிகள் முழுவதும் அழியும் என்றும், பருவநிலை மாற்றம் வேகமாக ஏற்படுத்தும் மாற்றங்களால் 2040க்குள் அழிய கூட வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் மற்ற பனிப்பிரதேச உயிரினங்களான பனி நரிகள், பென்குயின்கள் போன்றவற்றின் கதி என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.