செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஜூலை 2018 (19:52 IST)

தீவிரமடையும் போர்: 2.7 லட்சம் மக்கள் வெளியேற்றம்?

சிரியாவின் தென் மேற்கு பகுதியில் போராளிகள் வசம் உள்ள இடங்களில் இரண்டு வாரங்களுக்கு முன்பு சிரியா ராணுவம் தாக்குதலை தொடங்கியது. அப்போது முதல் குறைந்தது 270,000 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என ஐ.நா கூறியுள்ளது.
 
சண்டை நடக்கும் தெரா மற்றும் குனிட்ரா பகுதிளில் இருந்து வெளியேறும் மக்கள், ஜோர்டன் எல்லை மற்றும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ் எல்லை நோக்கிச் செல்கின்றனர்.
 
அகதிகளை ஏற்றுக்கொள்ள இரு நாடுகளும் மறுத்துள்ளதால் மனிதாபிமான நெருக்கடி ஏற்படலாம் என அச்சங்கள் எழுந்துள்ளன. ரஷ்ய வான் படையின் உதவியுடன், சிரியா அரசு படை இப்பகுதிகளில் முன்னேறி வருகிறது.
 
கடந்த வார இறுதியில், டஜன் கணக்கான நகரங்களும், கிராமங்களும் சரணடைந்து, பஷர் அல் அசாத் அட்சியை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இங்கு சண்டை தொடங்கியதில் இருந்து, 130க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியா கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
 
அமெரிக்கா மற்றும் ஜோர்டன் நாடுகள் தரகராக இருந்து ஏற்படுத்திய ஒப்பந்தத்தால், தெரா மற்றும் குனிட்ரா பகுதியில் ஒரு வருடம் 'போர் நிறுத்தம்' ஏற்பட்டிருந்தது. ஆனால், கிழக்கு கூட்டாவில் போராளிகளை வீழ்த்திய பிறகு, இந்த மாகாணங்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அதிபர் ஆசாத் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
 
போராளிகள் வசம் உள்ள தென் மேற்கு சிரியாவில் அரசு நடத்திய வான் மற்றும் தரைத் தாக்குதலுக்குப் பிறகு, இங்கு வசிக்கும் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் என ஐ.நா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
2,70,000 பேர் ஏற்கனவே தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர் என ஜோர்டனில் உள்ள ஐ.நா அகதிகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஹவாரி கூறுகிறார். 70,000 பேர் மூடப்பட்ட ஜோர்டன் எல்லைப் பகுதியான நாசிப்பில் கூடியுள்ளனர். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல், இங்குள்ள கூடாரங்களில் அவர்கள் வசிக்கின்றனர்.
 
ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் அல்-ஹுசேன், தெராவில் ஒரு மனிதப்பேரழிவு நடப்பதாக எச்சரித்துள்ளார். மேலும், வெளியேறும் மக்களுக்கு அண்டை நாடுகள் அடைக்கலம் தர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
 
தனது எல்லையை மூடியுள்ள ஜோர்டன், ஏற்கனவே தங்களிடம் பதிவு செய்யப்பட்ட 6,60,000 அகதிகள் உள்ளனர் என்றும், கூடுதல் அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளது. இப்பகுதியில், நிலைமை மோசமடைவதை தடுக்க ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஜோர்டன் வெளியுறத்துறை அமைச்சர் அய்மன் சபாதி கூறியுள்ளார்.
 
சண்டையை நிறுத்துவது தொடர்பாக சிரியா அரசு சார்பில், போராளிகளிடம் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தியது. தங்களது ஆயுதங்களைக் கைவிட்டால், பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளிக்கப்படும் என்ற ரஷ்யாவின் கூற்றை ஏற்றுக்கொள்ள போராளிகள் மறுத்துவிட்டனர்.