சர்வாதிகாரிகளுக்கு சிலை எதற்கு? – புதின் சிலையை தூக்கிய பாரிஸ் அருங்காட்சியகம்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது மெழுகு சிலையை பாரிஸ் மியூஸியம் நீக்கியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் அதை பொருட்படுத்தாமல் ரஷ்யா, உக்ரைனின் நகரங்களை கைப்பற்றி வருகிறது. இதனால் ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.
இந்நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த செயலை எதிர்க்கும் விதமாக பாரிஸில் உள்ள கிரேவின் மெழுகு சிலை அருங்காட்சியகம் அங்கிருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சிலையை நீக்கியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு இந்த சிலை ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சிலைகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது நீக்கப்பட்ட நிலையில் அங்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி சிலை வைக்கப்பட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து பேசிய அருங்காட்சிய இயக்குனர் “கிரேவின் அருங்காட்சியகத்தில் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளை என்றுமே நாங்கள் அடையாளப்படுத்தியதில்லை. அருங்காட்சியகத்தின் வரலாற்றில் முதல்முறையாக, தற்போது நடந்து கொண்டிருக்கும் வரலாற்று நிகழ்வுகளின் காரணமாக ஒரு சிலையை திரும்பப் பெறுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.