நிர்வாண சர்ச்சை புகழ் பாகிஸ்தான் மாடல் குவாண்டீல் பலூச் சுட்டுக்கொலை
கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தினால் அந்த அணியின் கேப்டன் அஃப்ரிடிக்கு தன்னுடைய நிர்வாண வீடியோவை அனுப்பி வைப்பேன் என பாகிஸ்தான் மாடல் அழகி குவாண்டீல் பலூச் அறிவித்தார்.
இவரது இந்த அறிவிப்பு செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது.
இதனால் அவர் பாகிஸ்தான் வீரர்களை திட்டி வீடியோ வெளியிட்டார். பின்னர் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியை காதலிப்பதக அறிவித்தார். தன்னுடைய ஒவ்வொரு அறிவிப்புகளின் மூலமும் ஊடகங்களின் கவனத்தை பெற அவர் சர்ச்சையாக எதையாவது செய்துகொண்டே இருப்பார்.
சமீபத்தில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த மதகுரு ஒருவருடன் செல்ஃபி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதன் மூலம் அந்த மதகுரு மத நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் குவான்டீல் பலூச் முல்தானில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். குவான்டீலை அவரது சகோதரரே சுட்டுக்கொன்றதாக காவல்துறை தரப்பு கூறியுள்ளது. மாடலிங் தொழிலை விட்டுவிடுமாறு அவர் கூறியதாகவும், குவான்டீல் மாடலிங்கை விடாததாலும் அவரை சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
17 வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட குவான்டீல் பலூச் 3 பேரை திருமணம் செய்து, அவர்களிடம் இருந்து பிரிந்து வந்துவிட்டார். அவருக்கு ஒரு மகன் இருந்தார். குவான்டீல் பலூச் ஏற்கனவே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் பாகிஸ்தான் அரசு அதனை நிராகரித்து விட்டது.