புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 1 ஆகஸ்ட் 2018 (21:16 IST)

வட கொரியா புதிய ஏவுகணை தயாரிக்கிறதா?

வடகொரியா - அமெரிக்கா இடையே உறவு கனிவாக மாறியிருந்தாலும் வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிடம் பேசிய சில அம்மெரிக்க அதிகாரிகள், வட கொரியாவில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் இடம் தனது செயல்பாட்டினை தொடர்ந்து வருவது, உளவு செயற்கைகோள்கள் மூலம் கண்டறியப்பட்டதாக தெரிவித்தனர்.
 
ஆனால், அதனுள் நடைபெற்று வரும் வேலைகள் எதுவரை போயுள்ளன என்பது தெரியாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் கடந்த ஜூன் மாதம் சந்தித்து கொண்டனர்.
 
கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க இரு நாடுகளும் உறுதி எடுத்தன. வட கொரியாவால் இனி எந்த அச்சுறுத்தலும் இல்லை என டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், அணு ஆயுதங்கள் மற்றும் திட்டங்களை முடிவுக்கு கொண்டு வர எந்த உறுதிப்பாடும் இல்லாமல், சலுகைகள் அளிப்பதாக அதிபர் டிரம்ப் விமர்சிக்கப்பட்டார்.
 
தற்போதிய நிலை என்ன?
 
திரவ எரிபொருள் மூலம் இயங்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஒன்று அல்லது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை பியாங்யாங் அருகில் உள்ள சனும்டங் தளத்தில் வட கொரியா தயாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
 
இதே இடத்தில்தான் அமெரிக்கா வரை சென்று தாக்கக்கூடிய ஹ்வாசங்- 15 என்ற வட கொரியாவின் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கப்பட்டது.இதனை கண்டுபிடித்த செயற்கைக்கோள் புகைப்படங்களில், இந்த இடத்திற்குள் வாகனங்கள் உள்ளே சென்று வருவதை பார்க்க முடிவதாகவும் ஆனால் ஏவுகணை தயாரிப்பது போன்ற படங்கள் இல்லை என்றும் ராய்டர்ஸ் நிறுவனம் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.