1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 மே 2021 (23:45 IST)

வியட்நாமில் புதிய கொரோனா திரிபு: திரள் பரிசோதனைக்கு நடவடிக்கை

வியட்நாமில் புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதால், அதை சமாளிக்கும் விதமாக மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இங்குள்ள ஹோ ச்சீ மின் நகரின் மையப்பகுதியில் கிறிஸ்துவ மிஷன் இயங்கி வருகிறது. அங்கு மட்டும் 125க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால், அந்த இடத்தை முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறது வியட்நாம் அரசு.
 
இதன் தொடர்ச்சியாக தினமும் ஒரு லட்சம் பேருக்கு வைரஸ் பரிசோதனை நடத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதிக பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கும் நோக்குடன் இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
 
இது தவிர மே 31 முதல் 15 நாட்களுக்கு வியட்நாமில் புதிய சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.
 
அதன்படி கடைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவை தற்காலிகமாக மூடப்படும். பொது இடங்களில் 10 பேர் கூட விதிக்கப்பட்ட தடை, ஐந்து பேராக கட்டுப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அங்கு வார இறுதியில் மிகவும் ஆபத்தான ஹைபிரிட் திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
 
இந்த புதிய திரிபு, இந்தியா மற்றும் பிரிட்டனில் கண்டறியப்பட்ட வைரஸ் அம்சங்களின் கலவையாக உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
 
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வியட்நாம் வெற்றி பெற்றிருந்தாலும், அங்கு சமீப நாட்களாக வைரஸ் பாதிப்பு அளவு உயர்ந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 7,000க்கும் அதிகமான பாதிப்புகளும் 47 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அதில் பாதிக்கும் மேற்பட்ட பாதிப்புகள், புதிய வகை திரிபுவால் ஏற்பட்டுள்ளது அதிகாரிகளை கவலை கொள்ளச் செய்துள்ளது.
 
சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டபோது, துரிதமாக செயல்பட்ட வியட்நாம், உடனடியாக தமது எல்லைகளை மூடியது. மேலும், உள்நாட்டில் இருந்த அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் வெளியேற்றியது. பிறகு நாட்டுக்குள் வந்த மக்களை தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தியது.
 
அதைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் புதிதாக வைரஸ் திரிபு கண்டறியப்பட்டுள்ளதால் தமது தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்த வேண்டிய அழுத்தம் வியட்நாம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு பத்து லட்சம் பேரில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்.