ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 31 மே 2021 (14:01 IST)

வியட்நாமில் புதிய கொரோனா திரிபு: 13 மில்லியன் மக்களுக்கும் கொரோனா டெஸ்ட்!

இந்தியாவில் பரவிய கொரோனா திரிபு மற்றும் பிரிட்டனில் பரவிய கொரோனா வைரஸ் திரிபு கலந்த ஒரு புதிய கோவிட் திரிபு வியட்நாமில் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

 
இந்த வகை திரிபு காற்றில் வேகமாகப் பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய திரிபு "மிக ஆபத்தானது" என வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக வியட்நாமில் 7,000 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சமீபத்தைய புதிய கொரோனா திரிபு பரவலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த கொரோனா பரவலைத் தடுக்க ஹோ சி மின் நகரத்தில் உள்ள 13 மில்லியன் மக்களையும் பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தால் கூட, நகரத்தில் உள்ள எல்லோரையும் பரிசோதனை செய்து முடிக்க 4 மாதங்களுக்கு மேல் ஆகலாம் என கூறப்படுகிறது.
 
பரிசோதனை மட்டுமின்றி, மே 31ஆம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு புதிய சமூக இடைவெளி விதிகளையும் வியட்நாம் அரசு அறிவித்திருக்கிறது. கடைகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கின்றன. மதம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
 
“10 பேருக்கு மேல் கூடும் அனைத்து பொது நிகழ்வுகளும் நகரத்தில் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இதை ஐந்தாக குறைக்க ஆலோசித்து வருகிறோம்” என வியட்நாம் அரசு தரப்பு கூறியுள்ளது.
 
வியட்நாமின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இதுவரை சுமார் 1 சதவீதம் பேர் (1 மில்லியன் பேர்) மட்டுமே தடுப்பூசியில் ஒரு டோஸையாவது செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட தொடக்க காலத்தில், வியட்நாம் மிக சிறப்பாக செயல்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தியது.
 
தங்கள் நாட்டு மக்களைத் தவிர மற்றவர்களுக்கு எல்லைகளை மூடியது. புதிதாக நாட்டுக்குள் வந்தவர்களை பரிசோதித்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தியது. மேலும் அவர்களோடு தொடர்பில் வந்தவர்களை தடமரிந்து அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இதனால் வியட்நாமில் கொரோனா தொற்று பெரிய அளவில் கட்டுப்பாட்டிலேயே இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.