அமெரிக்காவில் ராமர் கோவில் விளம்பரம்! – இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு கொடி!
நாளை ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற உள்ள நிலையில் அமெரிக்காவில் ராமர் குறித்த விளம்பரங்களை தடை செய்ய வேண்டுமென இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ள நிலையில் நாளை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தை கொண்டாட உலகம் முழுவதும் வாழும் இந்திய இந்துக்கள் சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் டைம் ஸ்குவாரில் ராமரின் புகைப்படத்தை விளம்பரப்படுத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. டைம் ஸ்குவாரில் உள்ள 17 ஆயிரம் அடி உயரம் கொண்ட நஸ்டாக் திரையில் பகவான் ராமர் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் நாளை விளம்பரப்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில் இந்துத்துவ வலதுசாரி எண்ணம் கொண்ட அமைப்புகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்க கூடாது என அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் சில நியூயார்க் நகர மேயர் மற்றும் கவுன்சிலிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அங்குள்ள இந்து மக்கள் கூறும்போது வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தை கொண்டாடும் நோக்கிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே தவிர யாரையும் காயப்படுத்தும் எண்ணம் இல்லை என தெரிவித்துள்ளன.