படம் பார்த்தால்தான் பால் கறப்போம்! – அப்டேட் ஆன மாடுகள்!
படம் பார்ப்பதால் மாடுகள் அதிகம் பால் கறப்பதாக ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது மாடுகளுக்கு மவுசு அதிகமாகி வருகிறது. அயோத்தியில் மாடுகளுக்கு குளிருக்காக ஸ்வெட்டர் மாட்டிவிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ரஷ்யா வேறுவிதமான முயற்சியை செய்து கொண்டிருக்கிறது.
மாஸ்கோ கால்நடை ஆராய்ச்சியாளர்கள் இயற்கை சூழலுக்கும், மாடுகள் பால் கறப்பதற்கும் இடையே தொடர்பு உள்ளதாக கண்டறிந்துள்ளனர். மேலும் மாடுகள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை பார்க்கும்போது அதன் பால் உற்பத்தி திறன் அதிகரிப்பதாக அறிந்த அவர்கள் அதை மாட்டிடம் சோதித்து பார்த்திருக்கிறார்கள்.
இதற்காக மாடுகளுக்கு மாட்டுவதற்கென்றே பிரத்யேகமாக விர்சுவல் ரியாலிட்டி பாக்ஸ்களை உருவாக்கியிருக்கின்றனர். இதை மாட்டின் முகத்தில் அணிவித்து விட்டால் அதில் வரும் காட்சிகளை பார்த்து மாடுகள் குஷியாகி விடுகிறதாம். இதற்காகவே மாடுகளுக்கு பிடித்த புல்வெளி, வயல் பரப்புகள், அழகான காலை நேரம் போன்ற காட்சிகள் அதில் தெரியும்படி செட் செய்துள்ளார்கள்.
சாதாரண நாட்களை விட இந்த படங்களை பார்க்கும் நாட்களில் மாட்டின் பால் உற்பத்தில் மாற்றங்கள் தெரிவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து மேலும் பல ஆய்வுகளையும் மாஸ்கோ கால்நடை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.