செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 நவம்பர் 2018 (21:30 IST)

நீதித்துறை அமைச்சரான சர்ச்சை நீதிபதி

பிரேசில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற தீவிர வலதுசாரி வேட்பாளரான சயீர் பொல்சனாரூ, ஊழலுக்கு எதிரானவராக அறியப்படும் நீதிபதி செர்ஜியோ மொரொவை நீதித்துறை அமைச்சராக நியமித்துள்ளார்.
தன்னை நீதித்துறை அமைச்சராக பதவியேற்குமாறு கேட்டுக் கொண்டது தனக்கு கிடைத்த "கௌரவம்" என்று மொரொ தெரிவித்தார்.
 
ஆனால் இந்த நியமனத்தின் மூலம், மோசடிக் குற்றச்சாட்டுக்கு எதிரான அவரது உயர்மட்ட விசாரணை, அரசியல் நோக்கத்தோடு செய்யப்பட்டது என்று குற்றச்சாட்டு வலுவாக எழுப்பப்படலாம்.
 
ஆபரேஷன் கார்வாஷ் என்று அறியப்படும் அவரது விசாரணை நியாயமற்ற முறையில் இடதுசாரி அரசியல் வாதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது என்று குற்றச்சாட்டு உண்டு.
 
இந்த விசாரணையில் உருண்ட ஒரு முக்கியமான தலை இடதுசாரித் தலைவரான முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா.
நடந்து முடிந்த தேர்தலில் லூலா முன்னணி போட்டியாளராக இருந்தார். அந்த நேரத்தில்தான் ஊழல் வழக்கில் அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
 
பிரிவினைவாத, வலதுசாரிக் கருத்துகளை உடையவரான போல்சனரூ கடந்த வாரம் நடந்து முடிந்த தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார்.
 
கடந்த காலத்தின் சர்வாதிகார ஆட்சியைப் பற்றி புகழ்ந்து பேசிய அவர், பெண்கள், கருப்பினத்தவர், ஒருபால் உறவினர் ஆகியோர் மீது கூறிய கருத்துகள் சர்ச்சையையும், கவலையையும் ஏற்படுத்தின.