1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 நவம்பர் 2020 (16:08 IST)

இப்போதைக்கு மக்கள் உயிர் முக்கியம்; சேர்ந்து வேலை செய்யலாம்! – ட்ரம்ப்க்கு பிடன் அழைப்பு!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் ட்ரம்ப்பும் நானும் இணைந்து செயல்பட வேண்டும் என ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றிருந்தாலும், இன்னமும் அவர் அதிபராக பதவியேற்கவில்லை. நடப்பு அதிபராக ட்ரம்ப்பே தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ஜோ பிடன் “அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு பெரும் உயிர்பலியை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இன்னமும் கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி கண்டுபிடிக்கப்பட்டாலும் அமெரிக்கா முழுவதும் உள்ள 40 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அதை விநியோகிப்பதில் பெரும் பிரச்சினை உள்ளது. இந்த விவகாரத்தில் நாம் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் “அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியை விந்யோகிக்க எங்களிடம் செயல்திட்டம் உள்ளது. நான் அதிபர் ட்ரம்ப்புடன் இணைந்து கொரோனா விவகாரத்தில் செயல்பட விரும்புகிறேன். தற்போது மக்களின் உயிர்தாம் மிக முக்கியம்” என கூறியுள்ளார்.