போர் நிறுத்தத்தில் ஆர்வம் காட்டும் இஸ்ரேல் – ஹமாஸ்! – காசாவில் திரும்பும் இயல்புநிலை!
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையேயான போர் நிறுத்தத்தின் இரண்டு கட்டங்களிலும் பல பணையக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது கட்ட போர் நிறுத்தம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வரும் நிலையில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் கடந்த மாதம் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியதோடு பல பொதுமக்களை பணையக்கைதிகளாக பிடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ஹமாஸ் ஆதிக்கம் செலுத்தும் காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழி, விமான வழி தாக்குதல்களை நடத்தி வருவதால் ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே கத்தார் உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே முதற்கட்டமாக நான்கு நாள் போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி ஹமாஸ் 50 பணையக்கைதிகளை விடுவித்தால் அதற்கு ஈடாக இஸ்ரேல் 150 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் முதல்கட்ட போர் நிறுத்தத்தில் ஹமாஸ் 51 பணையக்கைதிகளையும், இஸ்ரேல் 153 பாலஸ்தீன சிறை கைதிகளையும் விடுவித்தனர்.
அதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது கட்ட போர்நிறுத்தம் 2 நாட்கள் நீடித்தது. அதில் ஹமாஸ் தரப்பில் 10 பணையக்கைதிகளும், இஸ்ரேல் தரப்பில் 30 பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். இன்றுடன் இந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. எனினும் தொடர்ந்து மூன்றாவது கட்ட போர் நிறுத்தத்தை கொண்டு வர கத்தார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே பேசி வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்ந்தால் இருதரப்பிலும் மேலும் சில கைதிகள் விடுவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. தொடர்ந்து 6 நாட்களாக போர் நடைபெறாத நிலையில் காசா நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. போர் நிறுத்தம் நிரந்தரமானால் காசாவில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K