வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 டிசம்பர் 2023 (09:25 IST)

மிக்ஜாம் புயல்.. இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி! – பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

MK Stalin PM Modi
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய இடைக்கால நிவாரணம் வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


 
“மிக்ஜாம்‌” புயல்‌ வெள்ளத்தால்‌ ஏற்பட்டுள்ள கடும்சேதங்களை சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய்‌ 5,060 கோடி வழங்கிடக்‌ கோரி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ மாண்புமிகு இந்திய பிரதமர்‌ திரு.நரேந்திரமோடி அவர்களுக்குக்‌ கடிதம்‌

இந்தக்‌ கடிதத்தை மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு. டி.ஆர்‌.பாலு அவர்கள்‌ மாண்புமிகு பிரதமர்‌ அவர்களிடம்‌ நேரில்‌ வழங்குவார்‌. தமிழ்நாட்டில்‌ “மிக்ஜாம்‌” புயல்‌ வெள்ளத்தால்‌ ஏற்பட்டுள்ள சேதங்களை சீர்செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய்‌ 5,060 கோடி வழங்கிடக்‌ கோரி மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ திரு. நரேந்திரமோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ (5-12-2023) அன்று கடிதம்‌ எழுதியுள்ளார்‌.

அக்கடிதத்தில்‌, தமிழ்நாட்டில்‌ கடந்த 2, 3 மற்றும்‌ 4 ஆகிய தேதிகளில்‌ தாக்கிய ”மிக்ஜாம்‌” புயல்‌ காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின்‌ காரணமாக, சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில்‌ மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன்‌ காரணமாக, இந்த நான்கு மாவட்டங்களில்‌, குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ மிகக்கடுமையான பாதிப்புகள்‌ ஏற்பட்டுள்ளன. சாலைகள்‌, பாலங்கள்‌, பொது கட்டடங்கள்‌ என பல்வேறு உட்கட்டமைப்புகள்‌ சேதம்‌ அடைந்துள்ளன. மேலும்‌, இலட்சக்கணக்கான மக்களின்‌ வாழ்வாதாரம்‌ இதனால்‌ பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம்‌ விளக்கமாகக்‌ குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக குறிப்பிட்ட தலைப்புகளின்‌ கீழ்‌ ரூ. 5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ திரு. நரேந்திரமோடி அவர்களைக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

மேலும்‌, “மிக்ஜாம்‌” புயலால்‌ பெய்த கனமழையின்‌ காரணமாக ஏற்பட்ட சேதங்களைக்‌ கணக்கிடும்‌ பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது என்றும்‌, முழுவிவரங்கள்‌ சேகரிக்கப்பட்ட பின்னர்‌, விரிவான சேத அறிக்கை தயார்‌ செய்யப்பட்டு, கூடுதல்‌ நிதி கோரப்படும்‌ என்றும்‌ தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, சேதமடைந்த பகுதிகளைப்‌ பார்வையிட ஒன்றிய அரசின்‌ குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும்‌ தனது கடிதத்தில்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

Edit by Prasanth.K