செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 18 ஆகஸ்ட் 2021 (11:00 IST)

ஆப்கானிஸ்தானில் இருந்து தூதரக அதிகாரிகளை பத்திரமாக மீட்டது இந்தியா

தாலிபன்களின் வசமாகியிருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

 
அவர்கள் அனைவரும் காபூலில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அருகேயுள்ள ஹிண்டன் படைத்தளத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தூதரக அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர், காபூலில் தவித்து நின்ற இந்தியர்கள் சிலர் உள்பட மொத்தம் 150 பேருடன் விமானம் இந்தியாவுக்கு வந்தது.
 
இந்த மீட்புப் பணி மிகவும் கடினமானதாக இருந்தது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். "நாடு திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதர் ருத்ரேந்திரா டாண்டன் தெரிவித்தார்.
 
இன்னும் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானில் தவித்துக் கொண்டிருப்பதாகவும், வணிக ரீதியிலான விமானச் சேவை இயக்கப்பட்டதும் அவர்கள் மீட்கப்படுவார்கள் என்றும் டாண்டன் கூறினார்.
 
தாலிபன்கள் காபூல் நகரைக் கைப்பற்றியது முதலே அங்குள்ள விமான நிலையத்தில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் விமான ஓடுபாதைகளில் கூடியிருந்தனர்.