கூட்டம் கூட்டமாய் தெருவில் படுத்து உறங்கும் காதலர்கள் – தொடரும் ஹாங்காங் போராட்டம்
ஹாங்காங்கில் உள்ள கைதிகளை சீனாவுவில் உள்ள சிறைகளுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் காதலர்கள் சிலர் வீட்டுக்கே போகாமல் சாலைகளில் படுத்து உறங்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.
ஹாங்காங் புதியதாக கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்கள் சீனாவுக்கு ஆதரவாக உள்ளதாகவும், ஹாங்காங் மீண்டும் சீனாவிடமே அடிமைப்படுத்தும்படியும் இருக்கிறது என கூறி பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர். அரசு அலுவலகங்களை முற்றுகையிடுதல், அரசு அதிகாரிகள் வாகனங்களை, போக்குவரத்தை தடுத்து நிறுத்தி போராடுதல் என கடந்த இரண்டு வாரங்களாய் இந்த போராட்டம் இரவும், பகலுமாய் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் பொதுமக்கள் சிலர் விலகி கொண்ட நிலையில் இளைஞர்கள் பலர் தொடர்ந்து முகமூடிகளையும், சுவாச குழாய்களையும் அணிந்தபடி போராடி வருகின்றனர். இதில் சில காதல் ஜோடிகள் இரவு நேரங்களில் கூட வீட்டிற்கு செல்லாமல் சாலைகளிலேயே படுத்து உறங்குகின்றனர். இது ஹாங்காங் போலீஸுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
இது குறித்து ஹாங்காங் போலீஸார் “போராட்டம் நடத்தியவர்களில் பாதி பேர் தங்கள் குடும்பம், பொருளாதாரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு தங்கள் பணிகளுக்கு திரும்பியுள்ளார்கள். இளைஞர்கள் சீக்கிரத்தில் தங்கள் வீடுகளுக்கு திரும்புவார்கள். போலீஸார் அவர்கள் மீது எந்த தாக்குதலையும் தொடுக்க மாட்டார்கள்” என கூறியுள்ளனர்.