பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளை திருப்பிவிட இந்தியா திட்டம்: மத்திய அமைச்சர் தகவல்

Last Modified வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (08:00 IST)
காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் விரிசலடைந்ததை அடுத்து காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. இதற்கு பதிலடியாக இமயமலையில் இருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளை திருப்பிவிட்டு மீண்டும் இந்தியாவிற்கே செல்லும் வகையில் திட்டமிடப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, 'இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளை தடுத்து நிறுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தானுக்குள் பாயும் நதிகளை இந்தியாவில் எல்லையிலேயே திருப்பி விடுவதற்கு பொறியியல் அறிஞர்கள் திட்டம் தீட்டி வருவதாகவும், இரு நாடுகளும் செய்து கொண்ட நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை இந்த நடவடிக்கை பாதிக்காது என்றும் தெரிவித்தார். பாதிக்காத வகையில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காஷ்மீரில் 370வது சிறப்பு பிரிவை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவுடனான தூதரகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் பாகிஸ்தான் துண்டித்த நிலையில் இதற்குப் பதிலடியாக இமயமலையில் இருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீர் தடுக்க முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :