வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (18:51 IST)

ப. சிதம்பரம் - ஒரு பொருளாதார வல்லுநரின் அரசியல் எழுச்சியும், சறுக்கலும்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளிநாடு செல்லாமல் இருக்க லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ப. சிதம்பரத்தின் அரசியல் நுழைவு, வளர்ச்சி மற்றும் சறுக்கல்கள் குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து வந்து டெல்லியின் அதிகார சக்கர வியூகத்தில் அதிகபட்ச உயரத்தை அடைந்தவர் ப.சிதம்பரம்.

2009-14 இடையிலான இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த 9 அதிகாரம் பெற்ற அமைச்சரவைக் குழுக்களிலும் ஒரு கட்டத்தில் சிதம்பரம் இடம் பெற்றிருந்தார். அந்த அரசில் கொள்கை முடிவெடுப்பதில் மிகப் பெரிய ஆற்றல் பெற்றிருந்தவை இந்த குழுக்கள்.

அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அடுத்தபடியாக ஆட்சியில் அதிக அதிகாரம் உள்ளவர்களில் ஒருவராக சிதம்பரம் இருந்தார்.

1945 செப்டம்பர் 16-ம் தேதி தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்த சிதம்பரம், தமிழ்நாட்டின் கல்வி, இசை, வணிக வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் மகள் வழிப் பேரன். இவரது தாய் லட்சுமி ஆச்சி, அண்ணாமலை செட்டியாரின் மகள். சிதம்பரத்தின் தந்தை பெயர் பழனியப்பன்.

சென்னை லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், சென்னை சட்டக்கல்லூரி ஆகியவற்றில் பயின்ற சிதம்பரம் தொழில்முறை வழக்குரைஞர். அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பயின்றவர்.
உச்சநீதிமன்றத்திலும், இந்தியாவின் பல உயர்நீதிமன்றங்களிலும் வழக்குரைஞராகப் பணியாற்றியவர். இவரது மனைவி நளினியும் வழக்குரைஞர்.

இவரது மகன் கார்த்தி தற்போது சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர். சிதம்பரம் தற்போது மாநிலங்களவை உறுப்பினர். இதற்கு முன்பு 7 முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ளார்.

1972-ம் ஆண்டிலேயே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்தவர் சிதம்பரம். பிறகு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக 3 ஆண்டுகள் இருந்தார்.

1984ல் முதல் முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிதம்பரம், 1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது மத்திய வணிகத்துறை துணை அமைச்சராக இருந்தார். இதுதான் இவரது அமைச்சரவைப் பயணத்தின் முதல் படி. பிறகு பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தம், மக்கள் குறைதீர்வு துணை அமைச்சராக, துறை மாற்றம் பெற்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ்மூப்பனாரோடு...

சிதம்பரம் நீண்ட காங்கிரஸ் பாரம்பரியம் உடையவராக இருந்தாலும், அவர் முதல் முதலில் மத்திய கேபினட் அமைச்சராக ஆனது, காங்கிரசுக்கு எதிராக 1996ல் தேவகௌடா தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய முன்னணி அரசில்தான்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது தமிழ்நாடு சட்டப் பேரவைக்கும், இந்திய நாடாளுமன்றத்துக்கும் ஒரு சேர தேர்தல் நடந்தது. அதில் காங்கிரசும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் அமோக வெற்றி பெற்றன. தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வரானார். மத்தியில் பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார்.

ஆனால், தமிழ்நாடு காங்கிரசாரை அதிமுக அவமதிப்பதாக அந்தக் கட்சிக்குள் உள்ளக்குமுறல் இருந்துவந்தது. அத்துடன் 1991-96 அதிமுக ஆட்சி பெருமளவில் மக்களின் அதிருப்தியையும் ஈட்டியிருந்தது. எனவே, 1996 பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரசுக்குள் குரல்கள் எழுந்தன.

ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் காங்கிரசின் மத்தியத் தலைமை அதிமுக-வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துவிட்டது. இதனால், தமிழ்நாட்டின் செல்வாக்குமிக்க காங்கிரஸ் தலைவரான ஜி.கருப்பையா மூப்பனார் தலைமையில் பெருமளவு காங்கிரஸார் அந்தக் கட்சியில் இருந்து பிரிந்துவந்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி திமுக-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனர். அந்தக் கட்சியில் மூப்பனாருக்கு அடுத்தபடியாக முக்கியத் தலைவரானார் சிதம்பரம். இது அவரது அரசியல் வாழ்வில் மிக முக்கியத் திருப்பு முனை.

அந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் அமோகமாக வெற்றி பெற்றது. அதே நேரம், அந்தக் கூட்டணி இந்திய அளவில் காங்கிரசுக்கும், பாஜக-வுக்கும் மாற்று அணியாக உருவெடுத்தது. ஐக்கிய முன்னணி என்ற பெயரில் தேவகௌடா தலைமையில் அந்த அணி மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. அந்த அரசில்தான் சிதம்பரம் முதல் முறையாக கேபினட் அமைச்சராகி நிதித்துறைக்குப் பொறுப்பேற்றார்.

பிறகு, வேறொரு கட்டத்தில் அதிமுக கூட்டணியை எதிர்த்து தொடங்கப்பட்ட தமிழ் மாநிலக் காங்கிரஸ் அதிமுக-வுடனே கூட்டணி வைத்தபோது அதை எதிர்த்து தமிழ்மாநில காங்கிரசில் இருந்து வெளியேறி காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் சார்பில், 2004 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் எம்.பி. ஆனார்.
 
அந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தபோது அந்த அரசில் நிதித்துறைக்கான கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதுமுதல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை இழந்த 2014 வரையிலான 10 ஆண்டு காலம் தொடர்ந்து கேபினட் அமைச்சராக அதிகாரம் மிக்க பல துறைகளை கவனித்தார். அவற்றில் முக்கியமானவை உள்துறையும், நிதித்துறையும்.

இந்த பத்தாண்டுகள் அவரது அரசியல் வாழ்வு உச்சத்தை எட்டிய காலம். இந்த பத்தாண்டுகள்தான் அவரது அரசியலை ஆட்டிப் பார்க்கும் பல சர்ச்சைகளுக்கான ஊற்றுக் கண்ணாகவும் ஆயின.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு:

2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.

முதலீடு பெற்ற நிறுவனத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ப.சிதம்பரத்தின் மகன் கட்டுப்படுத்துவதால், அவரது தலையீட்டின்பேரிலேயே வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரிய அனுமதி அளிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு:

மார்ச் 2006ல் மொரீஷியசில் இருந்து இயங்கும் மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் சர்வீசஸ் ஹோல்டிங் லிமிட்டட் என்ற நிறுவனம், இந்தியாவின் ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சிதம்பரம் நிதியமைச்சராக இருக்கும்போது வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தது.

நிதியமைச்சராக சிதம்பரம் 600 கோடி வரையிலான வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்க முடியும். அதற்கு மேலான தொகை முதலீடாக வரும்போது அதனை பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பவேண்டும். இந்த ஏர்செல்-மேக்சிஸ் மூதலீட்டு ஒப்பந்தத்தில் சுமார் ரூ.3,200 முதலீடு செய்யப்பட்டிருந்தாலும் சிதம்பரமே அந்த அனுமதியை தந்தார் என்பதும், அதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் பலனடைந்தன என்பதும்தான் சிபிஐ வைக்கும் குற்றச்சாட்டு.

ஒரு பங்கின் முக மதிப்பு ரூ.10 என்பதால் அந்த அடிப்படையில் பார்த்தால் ஏர்செல் விற்ற பங்குகளின் மதிப்பு ரூ.180 கோடிதான் என்றாலும், பிரீமியம் விலையில் பங்குகள் விற்கப்பட்டதால் வந்து சேர்ந்த மொத்த மூலதனத்தின் மொத்த மதிப்பு சுமார் 3,200 கோடி என்பதுதான் சி.பி.ஐ. வாதம். ஆனால் சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றனர்.

இது தவிர, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அரசுக்கு சொந்தமான ஏர்இந்தியா நிறுவனத்துக்கு விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக நடக்கும் வழக்கிலும் சிதம்பரம் விசாரிக்கப்படுகிறார். ஏர் இந்தியாவுக்கு 43 ஏர்பஸ் விமானங்கள் வாங்குவதற்கு அனுமதி அளித்த அதிகாரம் பெற்ற அமைச்சரவைக் குழுவுக்கு சிதம்பரம் தலைமை வகித்தார்.

சிறந்த மேடைப் பேச்சாளர், வழக்குரைஞர், நிர்வாகி, பொருளாதார வல்லுநர் என்று பல முகங்கள் உடையவர் சிதம்பரம். பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை பிரதமர் மோதி அறிவித்தபோது அதைப் பற்றி துல்லியமான புள்ளிவிவரங்களோடு விமர்சித்துவந்தார் இவர்.

மீண்டும் இரண்டாவது முறையாக மோதி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றது முதல் சிதம்பரம் மீதான பல வழக்குகளில் நடவடிக்கைகள் வேகம் பெறுகின்றன. இந்த வழக்குகளின் போக்கு சிதம்பரத்தின் அரசியல் வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கும்.