வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2024 (13:55 IST)

ஐ.நா-வுக்கான ஈரான் தூதரை எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்தாரா? பரபரப்பு தகவல்..!

ஐ நாவுக்கான ஈரான் தூதரை எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்தார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில மாதங்களாக போர் நிலவி வரும் நிலையில், இந்த போரை நிறுத்த இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்த நிலையில், ஐ நாவுக்கான ஈரான் தூதர் அமீர் சையத் என்பவரை எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்ததாகவும், நியூயார்க்கில் இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பின்போது இரு தரப்புக்கு இடையே சுமூகமான கருத்துகள் பகிரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே, கடந்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேசியதாகவும், அப்போது எலான் மஸ்க் உடன் இருந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், தற்போது ஈரான் தூதரையும் அவர் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேல்-ஈரான் போர் மற்றும் ரஷ்யா-உக்ரைன் என இரண்டு போரையும் நிறுத்தி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆட்சி பொறுப்பை ஏற்கும் முன்பு அதற்கான பணிகளை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்பை கொலை செய்ய முயற்சி செய்த திட்டத்தில் ஈரானுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட நிலையில், டிரம்ப் அணுகுமுறையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த மாற்றத்தின் காரணமாக மஸ்க்-ஈரான் தூதர் சந்திப்பு நடந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்படலாம் என்றும், அதற்கு பதிலாக போரை நிறுத்த ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையை அமெரிக்க தரப்பிலிருந்து முன்வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Edited by Siva