எலாக் மஸ்க், விவேக் ராமசாமிக்கு புதிய பதவி கொடுத்த டிரம்ப்.. அதிரடி அறிவிப்பு..!
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் மற்றும் இந்தியா வம்சாவளியான விவேக் ராமசாமி ஆகிய இருவருக்கும் புதிய பதவியை டிரம்ப் தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் மோதினர். இந்த தேர்தலில் ட்ரம்ப் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். இதை அடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றன. இருப்பினும், அவர் இப்போதே தனது பணிகளை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. புதின் மற்றும் ஜெலன்ஸ்கி ஆகிய இருவரிடமும் தொலைபேசியில் பேசி, ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், அடுத்த கட்டமாக ட்ரம்பின் நெருங்கிய நண்பரான எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி ஆகிய இருவருக்கும் செயல் திறன் துறையை தாங்கி வழிநடத்த ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
செயல் திறன் துறை என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அரசாங்க நிறுவனமாக அங்கீகரிக்கப்படாத நிலையில், இவர்கள் நியமனம் உள் கட்டமைப்பில் முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வரும் என்று ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
Edited by Siva