அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் பிற நாட்டினர் பனாமா கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்கள் பனாமாவிலிருந்து வெளியேற மறுப்பதால் சிக்கல் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விமானங்களில் பலரை வெளியேற்றி வருகின்றனர். இந்தியாவிற்கு இதுவரை இரண்டு விமானங்கள் மூலம் சட்டவிரோத குடியேறிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்காவிலிருந்து அனுப்புவதற்கு பதிலாக மொத்தமாக பனாமா அனுப்பிவிட்டு, அங்கிருந்து அவர்களை பிரித்து அந்தந்த நாடுகளுக்கு அனுப்புவது என ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறாக சமீபத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த 300 பேர் பனாமாவுக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில் 171 பேர் தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல சம்மதித்துள்ளனர். ஆனால் மற்றவர்கள் தங்கள் நாடுகளுக்கு செல்ல மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அவர்கள் ஓட்டல் அறை கண்ணாடி வழியாக உதவி உதவி என கத்துவதும், பேப்பரில் உதவி கேட்டு வாக்கியங்களை எழுதி காட்டுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்த நாட்டிற்கு செல்ல மறுப்பவர்களை தொடர்ந்து ஓட்டலில் தங்க வைப்பதில் ஏற்படும் செலவினங்களால் பனாமா இக்கட்டில் ஆழ்ந்துள்ளது. இதனால் சொந்த நாடு திரும்ப மறுக்கும் நபர்களை தற்காலிகமாக டேரியன் மாகாணத்தில் தங்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K