திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!
திரிவேணி சங்கமத்தில் உள்ள தண்ணீர் குடிக்க ஏற்றது அல்ல என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த தண்ணீர் குடிப்பதற்கு மட்டுமல்ல, குடிக்கவே தகுதியானது என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த நிலையில், திரிவேணி சங்கமத்தில் உள்ள தண்ணீரை பொது இடத்தில் வைத்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குடிக்க தயாரா என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் சவால் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், திரிவேணி சங்கமத்தில் சுமார் 55 கோடிக்கு மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தகவல் உள்ளது. கோடிக்கணக்கானோர் இந்த இடத்தில் குளித்ததால், கழிவுகள் அதிக அளவில் ஆற்றில் கலந்து இருப்பதாகவும், இந்த தண்ணீரில் பாக்டீரியா இருப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஆனால், அதற்கு பதிலடி கொடுத்த யோகி ஆதித்யநாத், சனாதன தர்மத்திற்கு எதிரான பொய்யான தகவல்கள் பரவப்பட்டு வருவதாகவும், பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல, குடிப்பதற்கும் ஏற்றது என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பொது இடத்தில் யோகி ஆதித்யநாத் திரிவேணி சங்கமத்தில் உள்ள தண்ணீரை குடிக்க தயாரா? அவரும் அவருடைய அமைச்சர்களும் மக்கள் முன்னிலையில் அந்த தண்ணீரை குடித்து காட்ட வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் சவால் விடுத்துள்ளார். இதனால், இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran