சீனாவில் வரலாறு காணாத மழை; பல லட்சம் பேர் வெளியேற்றம்! – மேலும் தொடரும் மழை!
சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் மழை தொடரும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஜெங்சோ மற்றும் ஹெனான் உள்ளிட்ட பகுதிகளில் அதீத கனமழை பெய்துள்ளதால் ஊரே வெள்ளக்காடாகியுள்ளது. ஜெங்சோ பகுதியில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக 200 மில்லி மீட்டர் மழை பெய்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பெரும் வெள்ளத்தில் சாலைகளில் நின்றிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்படும் வீடியோ, வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த அதீத கனமழை காரணமாக இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர சுமார் 12.4 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. சீனாவில் கடந்த ஆயிரம் வருடத்தில் மிகப்பெரும் மழைப்பொழிவாக இது உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவில் கனமழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.