தென்கொரிய இசையை கேட்ட சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை! – வடகொரியாவின் பயங்கர முடிவு!
தென்கொரியாவின் பிரபல பேண்ட் குழுவின் இசையை கேட்டதற்காக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டு கால தண்டனையை வடகொரியா வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியா நாட்டை அதிபர் கிம் ஜாங் அன் ஆண்டு வரும் நிலையில் கடந்த பல ஆண்டுகளாக வடகொரியா உலகின் பார்வைக்கு அப்பால் இருந்து வருகிறது. பெரும்பாலும் வடகொரிய அரசால் அனுமதிக்கப்பட்ட செய்திகள் மட்டுமே உலகின் பார்வைக்கு வருகிறது. ஏவுகணை சோதனை, ராணுவ பயிற்சி மூலமாக அண்டை நாடான தென் கொரியாவையும், அதற்கு ஆதரவளிக்கும் அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளையும் வடகொரியா தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
உலக நாடுகளுக்கு மட்டுமல்லாம் சொந்த நாட்டு மக்களுக்குமே வித்தியாச வித்தியாசமான கட்டுப்பாடுகளை விதித்து தொல்லை தருவதிலும் வடகொரியாவுக்கு நிகர் வடகொரியாதான். வடகொரிய அதிபரான கிம் ஜாங் அன் பெயரில் வேறு யாரும் இருக்க கூடாது என அந்த பெயரில் இருந்த பல நபர்களது பெயரை மாற்றிய சம்பவங்கள் எல்லாம் நடந்தது. அதுபோல எதிரி நாடான தென்கொரியா மற்றும் பிற நாடுகளில் இருந்து வெளியாகும் திரைப்படங்கள், இசைத்தட்டுக்கள், பாடல்களை பார்க்கவும், கேட்கவுமே கடும் தடை வடகொரியாவில் உள்ளது.
இந்நிலையில்தான் அந்த தடையையும் மீறி இரு சிறுவர்கள் தென் கொரியாவின் கே-பாப் வகை பேண்ட் பாடலை கேட்டதாகவும், அதனால் அவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையாக வேலை செய்யும் தண்டனையை வடகொரிய அரசு அளித்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியுள்ளது. இந்த சம்பவம் 2022ம் ஆண்டில் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. எது உண்மையாக இருந்தாலும் அது வடகொரியாவிலிருந்து மூடுபனி போலதான் உலக நாடுகளால் அறிந்து கொள்ள முடிகிறது.
Edit by Prasanth.K