பிரேசில் அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை உயர்வு....பலர் மாயம்
பிரேசில் நாட்டில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இரும்புத்தாது சுரங்கத்தில் உள்ள அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 க்கு மேல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நகரம் புருமாடின்கோ. இங்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இரும்புத்தாது சுரங்கமுள்ளது. சுரங்கத்தில் அருகில் பயன்படுத்தப்படாமல் இருந்த அணையானது கடந்த 25 ஆம் தேதி திடீரென்று உடைந்து அதிலிருந்த சேறும் சகதியுமாக வெளியேறியது.
இதில் தொழிலாளர்கள் பலரும் சிக்கிக்கொண்டனர்.அணையின் அருகே இருந்த உணவகம் சகதியில் முழுவதும் புதைந்து போனது. தொழிலாளர்கள் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது இவ்விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.
இதுபற்றி அறிந்த மீட்புகுழுவினர் சம் இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது 40 தொழிலார்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அதன் பின்னர் 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவ்விபத்தில் உயிர்பலி எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளதாக மீட்புக்குழு அறிவித்துள்ளது.
மேலும் தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்கள் என மொத்தம் 305 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
192 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் , இவர்களில் 23 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.