ஹாரி பாட்டர் புத்தகங்களுக்கு தடை..
அமெரிக்க பள்ளி ஒன்றில் ஹாரி பாட்டர் புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒரு விநோதமான காரணத்தை கூறுகின்றனர்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜே.கே.ரவுலிங் என்ற புனைவு எழுத்தாளர் எழுதிய ”ஹாரி பாட்டர்’ புத்தகங்கள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றன. 1997 லிருந்து 2007 வரை 7 பாகங்கள் வரை வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டன. இந்த 7 பாகங்களும் திரைப்படங்களாகவும் வெளிவந்து உலகளவில் பலதரப்பட்ட ரசிகர்களை ஈர்த்தன.
“ஹார்க்வேர்ட்ஸ்” என்ற மந்திர தந்திரங்கள் பயிலும் பள்ளியை கதைக்களமாக கொண்டு இந்த கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தின் நாஷ்வில்லே நகரில் உள்ள ஒரு கிருஸ்துவ பள்ளியில் ஹாரி பாட்டர் புத்தகங்களை மாணவர்கள் யாரும் படிக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு என்ன காரணம் என கேட்டபோது, அந்த பள்ளியின் பாதிரியார் டான் ரீஹல் ”ஹாரி பாட்டர் கதைகள் கற்பனையாக இருந்தாலும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள மந்திரங்கள் உண்மையான மந்திரங்கள். அதனை படிப்பதனால் தீய சக்திகளை கொண்டுவருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளது. இது குறித்து பேய் ஓட்டுபவர்களை கேட்டபோது, அந்த புத்தகங்களை தடை செய்யுமாறு கூறினர். ஆதலால் தடை செய்தோம்” என கூறியுள்ளார்.
புனைவு கதை தீய சக்திகளை கொண்டுவந்துவிடும் என்பதால் ஹாரி பாட்டர் புத்தகங்களை தடை செய்தது அம்மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.