இலங்கை தமிழ் குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஆஸ்திரேலிய மக்கள்

Last Updated: புதன், 15 மே 2019 (16:55 IST)
ஆஸ்திரேலியாவின் சட்டத்தை மீறி அகதிகளாக வந்த இலங்கை தமிழர் குடும்பத்தினரை வெளியேற்றும் அரசின் முடிவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்களே போராடி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 
நடேஷ் மற்றும் பிரியா இலங்கையிலிருந்து அகதிகளாக 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியா தப்பி வந்து அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்தனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டனர். தற்போது நான்கு வயது மற்றும் இரண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பிறகு இவர்கள் முகாமிலிருந்து வெளியேறி குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிலோலா என்னும் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். 
 
இந்நிலையில் அகதிகள் குடியேற்றத்தை தடை செய்த ஆஸ்திரேலிய அரசு போதிய ஆவணங்கள் இன்றி வாழும் அகதிகளையும் வெளியேற்ற முடிவு செய்தது. அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையில் நடேஷ் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்பட இருக்கின்றனர். 
 
இதையறிந்த பிலோலா நகர்வாசிகள் பலர் நடேஷ் குடும்பத்தினருக்கு ஆதரவாக போராட்டம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய நடேஷ் குடும்பத்தின் நண்பரும், வழக்கறிஞருமான ஏஞ்சலா ப்ரெடரிக் “நடேஷ் மற்றும் பிரியா எங்களுக்கு நல்ல நண்பர்கள். அவர்கள் இலங்கையில் பல கொடூரங்களை அனுபவித்து தப்பி இங்கு வந்தார்கள். அவர்களை திருப்பி அனுப்புவதை அவர்களும், நாங்களும் விரும்பவில்லை. எனவே இதற்காக தொடர்ந்து போராடுவோம்” என தெரிவித்தார்.
 
இன்னும் சிறிது நாளில் ஆஸ்திரேலியாவில் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில் உடனடியாக இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் சரியான முடிவை எட்ட வேண்டும் என அம்மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :