ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 14 மே 2019 (21:33 IST)

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு

இலங்கையில் ஈஸ்டர் தின தொடர் குண்டுதாக்குதலை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறைகள் காரணமாக செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு நேர நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று (திங்கள்கிழமை) இரவு ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தபோது, முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதோடு, சில இடங்களில் தீ வைத்தனர்.
 
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளில் புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா - கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வன்முறையாளர்களின் தாக்குதல்கள் காரணமாக, மேற்படி நபர் உயிரிழந்துள்ளார்.
 
தீவிர வலதுசாரி பௌத்த குழுவின் தலைவர் உள்பட 60 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
 
அமைதி காக்க கேட்டுக்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் அவை வெறுப்புணர்வை களைய வேண்டுமெனவும் கோரியுள்ளது.
 
இரண்டாவது நாள் இரவில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவு உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
 
கொட்டாரமுல்லவில் உயிரிழந்த 45 வயதுடைய அமீர் என்பவர் 4 பிள்ளைகளின் தந்தையாவர். தச்சுத் தொழிலாளியான இவரின் வீடு உட்பட, கொட்டாரமுல்ல பகுதியில் சுமார் 25 வீடுகள் நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளன.
 
இதன்போதே, அமீர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டார் என்றும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
 
 
இதேவேளை, அங்குள்ள 4 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
 
நாத்தாண்டியா பிரதேச சபை உறுப்பினர் ரிழ்வான் மற்றும் கொட்டாரமுல்ல பள்ளிவாசல் செயலாளர் ஆகியோரின் வீடுகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அந்த பகுதியைச் சேர்ந்த சயின் அஹமட் பிபிசி க்கு தெரித்தார்.
 
கொட்டாரமுல்லவில் சுமார் 1700 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன.
 
நேற்றிரவு கொட்டாரமுல்ல பகுதியில் ராணுவத்தினர் கடமையில் இருக்கத்தக்கதாக, அவர்களின் ஆதரவுடனேயே முஸ்லிம்களின் வீடுகள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக, அங்குள்ள சிலர் பிபிசியிடம் கூறினர்.
 
இதேவேளை, கொட்டாரமுல்லயிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தும்மோதர பகுதியிலும் இரண்டு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு, வீடுகளும் தாக்கப்பட்டு, தீவைப்பு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
 
இந்த நிலையில் கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 30 கடைகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 20 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்குள்ள உள்ளுரா் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
 
இது இவ்வாறிருக்க, மிவாங்கொட பிரதேசத்திலிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கல்லொளுவ பகுதிலுள்ள முஸ்லிம்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், குறித்த உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
வீடுகளுக்குள் இருந்த முஸ்லிம்களை வெளியே அழைத்து, அவர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தினார்கள் என்கிறார் அந்த ஊடகவியலாளர்.
 
இதேபோன்று, இன்னும் பல இடங்களிலும் முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்களை தாக்கியும் தீ வைத்தும் வன்முறையாளர்கள் சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
 
இந்த நிலையில், மினுவாங்கொட பிரதேசத்திலும் வன்முறையாளர்களின் தாக்குதலில் முஸ்லிம் ஒருவர் இறந்துள்ளதாக, இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றபோதும், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.