1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (18:20 IST)

விளையாட்டில் ஏற்பட்ட விபரீதம்: குத்துச்சண்டை வீரர் மரணம்!

அமெரிக்காவில் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வீரர் பலமான காயம் ஏற்பட்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் யூ.எஸ்.பி.ஏ குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முன்னாள் சாம்பியன் பெட்ரிக் டேவும், ஒலிம்பிக் சாம்பியனான கான்வெல்லும் மோதினர்.

தொடக்கத்திலிருந்து சுவாரஸ்யமாக சென்ற ஆட்டத்தின் 10வது சுற்றில் நல்லபடியாக விளையாடிக் கொண்டிருந்த பெட்ரிக் டே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கோமா நிலைக்கு சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு விலையாட்டின்போது ஏற்பட்ட காயத்தினால் மூளையில் அதிர்வு ஏற்பட்டதால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

தொடர்ந்து மருத்துவ சிகிச்சையளித்தும் பலனின்றி பெட்ரிக் டே இன்று காலமானார். இது பலருக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து தனது இரங்கல்களை தெரிவித்துள்ள சக போட்டியாளரான கான்வெல் ”நான் போட்டியை வெறும் போட்டியாக மட்டும்தான் பார்த்தேன். அவரை காயப்படுத்த வேண்டும் என நான் நினைக்கவில்லை. இனி நான் இந்த குத்துச்சண்டை போட்டியில் விளையாடுவதாக இல்லை. இத்துடன் போட்டிகளில் இருந்து விலகிக்கொள்ள இருக்கிறேன்” என வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.

வெறும் 27 வயதே ஆன இளம் வீரர் பெட்ரிக் டேவின் மரணம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.