1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (09:35 IST)

தலீபான்களிடம் சிக்கிய இராணுவத்தினர் மீட்பு! – ஆப்கானிஸ்தான் அதிரடி!

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளிடம் சிக்கி சிறை வைக்கப்பட்ட 62 ராணுவ வீரர்களை ஆப்கான் ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி மீட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலீபான்களுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. தலீபான் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானின் பல கிராமங்களை கைப்பற்றுவதும், பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டு வைப்பதுமாக பல்வேறு சீரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அவர்களை ஒடுக்க ஆப்கானிஸ்தான் ராணுவமும், போலீஸாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பல சமயங்களில் போலீஸாரையும், ராணுவத்தினரையுமே தலீபான்கள் கடத்தி சென்று விடுகின்றனர். இந்நிலையில் பல்வேறு காலக்கட்டங்களில் கடத்தப்பட்ட 62 ராணுவ வீரர்களை தலீபான்கள் பட்கிஸ் மாகாணத்தில் உள்ள பாலா முர்ஹாப் பகுதியில் அடைத்து வைத்திருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதிரடி தாக்குதலுக்கு திட்டமிட்ட ராணுவத்தினர் தலீபான்களின் ஆக்கிரமிப்பு பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பகுதியில் இருந்த 20க்கும் மேற்பட்ட தலீபான்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. பிறகு அங்கு சிறை வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக ஆப்கான் செய்தி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.