வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. மகளிர் தினம்
Written By
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2020 (15:35 IST)

பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்: மகளிர் தினம்

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்பது அந்த காலம். ஆனால் கல் உடைக்கும் வேலையில் இருந்து கணினி துறை முதல் கொண்டு விண்வெளிக்கு செல்வது வரையிலான அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல் கல்லாக பெண்கள் விளங்கும் அளவுக்கு சாதனை  படைத்து உயர்ந்துள்ளனர். 
பெண்கள் சமுதாயத்திற்கு என்று ஒருநாள் உலகெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் உலக மகளிர் தினம். ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிடலாம். 
 
நம் நாட்டு பகுத்தறிவுப் பெண்டிரைச் சற்று திரும்பிப் பார்த்தால் ''வன்மை உயர்வு மனிதர் நலமெல்லாம் பெண்மையினால் உண்டு'' என்னும் புரட்சிக் கவிஞரின் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன. பண்டித ராமாபாய், கவிக்குயில் சரோஜினி நாயுடு, வள்ளியம்மை, ராணி  சென்னம்மா, வேலுநாச்சியார், மோகன முத்துவடிவு, தில்லையாடி வள்ளியம்மை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ருக்மணிதேவி அருண்டேல்,  கண்ணம்மை, மணியம்மை என மிக நீள பட்டியலுண்டு. எண்ணிப்பார்த்தால் எத்தனை பெண்டிரின் வியர்வை, உழைப்பிற்கு பின் நமக்கு இந்த  அங்கீகாரம் கிடைத்திருப்பது புரியும்.
 
பெண்கள் உரிமை எனப் பலரால் பேசப்பட்டாலும் பெண்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அடக்கப்படுவதும், ஆபாச பொருளாக பார்க்கப்படுவதும் வீடுகளிலும் பொது இடங்களிலும் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதும் பொருளாதார, அரசியல், சமூக  நிலைகளில் ஒதுக்கப்படுவதும்  இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 
 
இந்தியாவுக்கு அகிம்சை வழியில் சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த மகாத்மாகாந்தி அவர்கள் ‘எப்போது எமது நாட்டில் பெண்கள் நல்லிரவிலும் நடமாடக்கூடிய சூழ்நிலை உருவாகின்றதோ அப்போதே உண்மையான சுதந்திரம் உருவாகும்’ என்றார். இதே போன்று ‘பெண் அடிமை தீரும்  மட்டும் மண் விடுதலை என்பது முயற்கொம்பே’ என்றார் பாவேந்தர் அவர்கள்.
 
பெண் என்பதற்கு தாய்மை எனும் இன்னுமொரு பொதுப்பெயரும் உண்டு. பெண்ணால் மட்டுமே தாய்மை அடையும் பெருமையும் உண்டு. இதனால்தான் தாய்மண், தாய்நாடு, தாய்மொழி, என்றெல்லாம் பெண்ணின் இலக்கணம் பெருமை சேர்த்துள்ளது.
 
பெண்கள் உடல் சார்ந்த சிந்தனையிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளவேண்டும். உடலில் பொதிந்துள்ள பெண்ணியத்தை அவள் விடுத்து அவர் சுதந்திர பெண்ணாக சமூகத்தில் சாதனை படைத்திடும் பெண்ணாக மாறவேண்டும்.