நான் தமிழன் என்பதும் குடும்ப அரசியல்தான் – சீமானை சீண்டும் கமல் !
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன் இன்று சென்னையில் உள்ள தங்கள் கட்சி அலுவலகத்தில் பெண்கள் தினவிழாவைக் கொண்டாடினார்.
நடிகர் கமலஹாசன் தனது கடைசிப் படமான இந்தியன் 2 படப்பிடிப்பு மற்றும் அரசியல் களம் என இரட்டை சவாரி செய்து வருகிறார். தமிழக அரசியல் களம் கூட்டணி பேரங்களில் சூடு பிடித்து வரும் வேளையில் கமல் தனித்துப் போட்டியிடுவதற்காக ஆயத்தமாகி வருகிறார்.
இந்நிலையில் இன்று சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள அவர்கள் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட பெண்கள் தின விழாவில் கலந்துகொண்டு பேசினார். அதில் ‘நல்லது இந்த உலகத்தில்தான் இருக்கிறது. அதை நாம் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதைத் தேடாத 20-35 ஆண்டுகளைத் தமிழகம் கடந்துவிட்டது. அதை மாற்ற யாராவது வர மாட்டார்களா என கேட்கக் கூடாது. அப்படித்தான் நானும் காத்துக்கொண்டிருந்தேன். அதற்கு நாம் தான் வர வேண்டும். புரட்சி உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது. நாம் தொண்டர்களிடம் மட்டும் பேசவில்லை தலைவர்களிடமும்தான் கூறுகிறோம்.
‘நான் தமிழன்' என சொல்லி வாய்ப்பு கேட்காதீர்கள். அது உங்கள் தகுதி இல்லை.. தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். தகுதியைச் சொல்லி வாய்ப்பு கேளுங்கள். தமிழன் என சொல்லி வாய்ப்பு கேட்பதும் குடும்ப அரசியல் போன்றதுதான். திறமையில்லாமல் தமிழனாக இருப்பவருக்கு வாய்ப்பு ஏன் வாய்ப்புக்கொடுக்க வேண்டும்’ எனப் பேசியுள்ளார்.
கமலின் இந்த பேச்சு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சீண்டுவது போல அமைந்துள்ளதாக சலசலப்புகள் எழுந்துள்ளன.