சேலத்தில் சமூக சேவகர் பியூஷ் மானுஷ் அதிரடி கைது
கடந்த சில நாட்களாக ஆட்சியாளர்களுக்கும், அரசு திட்டங்களுக்கும் எதிராக கருத்து சொல்பவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் வேல்முருகன், மன்சூர் அலிகான் ஆகியோர்களை தொடர்ந்து தற்போது சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆா்வலா் பியூஷ் மானுஷ் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சேலம் பகுதியில் உள்ள பல்வேறு ஏரி, குளங்களை தனது தனிப்பட்ட ஆர்வத்தில் தூர்வாரி நீர் நிலைகளாக மாற்றி வரும் சமூக சேவகர் பியூஷ் மானுஷ். இவரது செயல்களை சமீபத்தில் நடிகர் சிம்பு பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விளைநிலங்களையும் ஆயிரக்கணக்கான மரங்களையும் அழித்து சேலம் – சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழித்தடங்களைக் கொண்ட பசுமை வழிச்சாலை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிவித்து அந்த பகுதி மக்கள் போராடி வருகின்றனர், சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ் அவர்களும் இந்த வழித்தடத்தில் வனப்பகுதிகள், மலைப் பகுதிகள், குடியிருப்புகள் நிறைந்து இருப்பதால் இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று தனது எதிர்ப்பினை தெரிவித்தார். அதுமட்டுமின்றி இதுகுறித்து மக்களிடம் பிரச்சாரமும் செய்தார். இந்த நிலையில் நேற்று திடீரென பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டார்.
பியூஷ் மானுஷ் சமீபத்தில் சேலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்று மரத்தை வெட்டியதாக பயமுறுத்தி ஒரு பெரிய தொகை கொண்ட செக் வாங்கினார் என்ற சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.