சாமி 2: திரைவிமர்சனம்

Last Modified வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (11:08 IST)
வெற்றி பெற்ற முதல் பாக திரைப்படத்தை இரண்டாம் பாகமாக எடுக்கும் டிரெண்ட் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. அந்த வரிசையில் இன்று 'சாமி 2' வெளியாகியுள்ளது. விக்ரம், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கியுள்ள இந்த படம் முதல் பாகம் போலவே வெற்றி அடையுமா? என்பதை பார்ப்போம்

முதல் பாகத்தின் வில்லனான பெருமாள் பிச்சையின் மகன் பாபிசிம்ஹா, தனது தந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக சாமி செய்தி பரப்பியதை அறிந்து கொழும்பில் இருந்து நெல்லை வந்து சாமியை கொல்கிறார். அவரது மனைவி ஐஸ்வர்யா ராஜேஷையும் நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் இறந்த பின்னர் அரைமணி நேரம் கழித்து பிறக்கும் சாமியின் மகன் ராமசாமி தனது பெற்றோரை கொலை செய்த பாபிசிம்ஹாவை எப்படி வதம் செய்கிறார் என்பதுதான் மீதிக்கதை

முதல் பாகமே போலவே மிடுக்கான போலீஸ் தோற்றத்தில் வரும் விக்ரமின் நடிப்பு சூப்பர். ஆனாலும் முதல் பாகத்தில் உள்ள மிளகாய் பொடி காமெடி, இட்லியில் பீர் ஊற்றி சாப்பிடும் சேட்டை, நான் போலீஸ் இல்லை பொறுக்கி என்று கூறும் எகத்தாளம் இந்த படத்தில் மிஸ்ஸிங். இருப்பினும் ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை தனி ஆளாக தாங்கி பிடிக்கும் வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

கீர்த்திசுரேஷ் வழக்கம்போல் ஹீரோவை காதலித்துவிட்டு, இரண்டு டூயட் பாடல்களை பாடுவதற்காக இந்த படத்தில் நடித்துள்ளார்.

சூரியின் காமெடி வரவர கர்ணகொடூரமாக உள்ளது. இதுபோன்ற மரண மொக்கை காமெடியை தந்து கொண்டிருந்தால் சூரி விரைவில் பீல்ட் அவுட் ஆகிவிடுவார் என்பதில் சந்தேகம் இல்லை

பாபிசிம்ஹாவின் வில்லன் தோற்றமும் நடிப்பும் மிரட்டுகிறது. அவரது கண்களிலேயே ஒருவித குரூரம் தெரிவதால் வில்லன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். இருப்பினும் முதல் பாகத்தின் பெருமாள் பிச்சைக்கு ஈடான நடிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தகக்து.

டெல்லி கணேஷ், சுமித்ரா, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், சஞ்சிவ் ஆகியோர் நடிப்பில் குறை ஒன்றும் இல்லை

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையில் ஒரே இரைச்சல். காது ஜவ்வு கிழிந்து விடும் அளவுக்கு உள்ளது. விக்ரம் தோன்றும் காட்சிகளின்போது வரும் தீம் மியூசிக் மட்டும் ஓகே. பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலவீனம். ஒரு பாடல் கூட தேறவில்லை

இயக்குனர் ஹரி இன்னும் பழைய பார்முலாவிலேயே திரைக்கதை அமைத்துள்ளார். 'தீரன் அதிகாரம் ஒன்று' போல் புதிய வித்தியாசமான கோணங்களில் போலீஸ் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கும் டிரெண்டுக்கு தமிழ் சினிமா மாறிவிட்டதை இன்னும் இயக்குனர் ஹரி புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை. சிங்கம் படத்தின் மூன்று பாகங்களில் உள்ள அதே பார்முலாவைத்தான் இதிலும் பயன்படுத்தியுள்ளார். நம்ப முடியாத சண்டைக்காட்சிகள், ஒரு காட்சி கூட புதுமையாக இல்லாதது
படத்தின் வீக்னெஸ்

மொத்தத்தில் விக்ரமின் தீவிர ரசிகர்கள் மட்டும் ஒருமுறை பார்க்கலாம்

ரேட்டிங்: 1.5/5


இதில் மேலும் படிக்கவும் :