திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (09:09 IST)

கேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 37ஆக உயர்வு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கேரளாவில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 37 பேர் வரை பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்ளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, கொல்லம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பகுதிகள் அனைத்து நதியோரம் மற்றும்  மலையோர பகுதிகளாக இருப்பதால் பாதிப்பின் தாக்கம் அதிகம் இருந்ததாக கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் உத்தரவின்படி 25 ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறது. இரவுபகலாக மீட்புப்படையினர் வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதில் ஈடுபட்டுள்ளனர்.
 
நேற்று முன் தினம் வரை 20 பேர் பலியாகியிருந்த நிலையில் நேற்று வந்த தகவலின்படி பலி எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. மேலும் 150 பேர்களை காணவில்லை என்ற தகவல் வந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது