பிரதமரால் தூத்துக்குடி சம்பவத்திற்கு அனுதாபம் கூட தெரிவிக்க முடியாதா? ஸ்டாலின் ஆவேசம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் பிரதமர் மோடி இதுவரை அனுதாபம் கூட தெரிவிக்காமல் இருப்பது வேதனை அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற பொதுமக்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துயர சம்பவத்திற்கு நாடெங்கும் பலர் அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் விராத் கோலிக்கு பதிலளிக்கும் பிரதமரால் இதுவரை தூத்துக்குடி சம்பவத்திற்கு ஒரு இரங்கலை கூட தெரிவிக்க நேரமில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 60-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருக்கிறார்கள். பிரதமர் தூத்துக்குடிக்கு நேரில் சென்று. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என்பது வெட்கக்கேடானது என ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.