சிரூர் மடாதிபதி மர்ம மரணம்: விஷம் வைத்து கொல்லப்பட்டாரா?
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிரூர் மடத்தின் 30வது மடாதிபதியாக இருந்தவர் லட்சுமிவரதீர்த்த சுவாமி என்பவர் நேற்று திடீரென மரணம் அடைந்தார். இவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
54 வயதான சிரூர் மடத்தின் மடாதிபதி லட்சுமிவரதீர்த்த சுவாமிக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவர் சில மணி நேரத்தில் மரணம் அடைந்தார். அவருடைய உடல் அவரது சீடர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சிரூர் மடத்தின் வளாகத்திலேயே அவரது உடல் இந்துமத சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் லட்சுமிவரதீர்த்த சுவாமி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் இதுகுறித்து தகுந்த விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றும் அவரது சகோதரர் ரவிகிரண் முருடேஷ்வர் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
லட்சுமிவரதீர்த்த சுவாமி உடல் அடக்கம் செய்வதற்கு முன்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை வந்தபின்னரே இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்