மடிப்பாக்கம் அதிமுக கவுன்சிலர் வீட்டில் ரூ.40 லட்சம் பறிமுதல் : தேர்தல் அதிகாரிகள் அதிரடி
சென்னை மடிப்பாக்கம் அதிமுக கவுன்சிலர் வீட்டீல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு இடங்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும், அதற்காக பல அரசியல் பிரமுகர்கள் வீட்டில் பணம் மற்றும் பரிசு பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதன் அடிப்படையில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் லட்சக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை, சரியான ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ.90 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மடிப்பாக்கம் 169வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் வீட்டில் வாக்களர்களுக்கு கொடுப்பதற்காக கட்டு கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று இரவு ஜெயச்சந்திரன் வீட்டிற்கு சென்று விடிய விடிய அதிரடி சோதனை செய்தனர். அப்போது ரூ.40 லட்சத்து 38 ஆயிரம் ரொக்க பணம் இருந்தது. மேலும் அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடமில்லை.
இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அதிமுக கவுன்சிலர் வீட்டில் இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.